Ezhilan Ramarajan

தலைமைப்பண்பு மிக்க எழிலன்!

எழிலன் அவர்கள், எழும்பூர் டான்பாஸ்கோ முன்னாள் மாணவர், கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை, டெக்ஸாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்.

எழிலன் அவர்கள் தனித்துவமான தலைமைப் பண்புகளைக் கொண்டவர். எடுத்துக்காட்டாக, அவரது பேரவை அனுபவத்தையே கூட எடுத்துக் கொள்ளலாம். 2009 அட்லாண்டா பேரவை விழா துவக்கம் தொடர்ந்து பேரவையோடு பயணித்து வருபவர். கடந்த முறை தேர்தலின் போது சகல தரப்பினராலும் விரும்பப்பட்டு, துணைப்பொருளாளராக ஒருதரப்பினரால் முன்மொழியப்பட, மறுதரப்பினரால் வழிமொழியப்பட, போட்டியின்றிச் செயற்குழுவுக்குத் தெரிவானார்.

கடந்தமுறை ஒரே அணியில் தலைவர், துணைத்தலைவருக்குப் போட்டியிட்டவர்கள்தாம் இம்முறை தனித்தனி அணிகளில் தலைவர் போட்டிக்குப் போட்டியிடுகின்றனர். இருவருக்குமே தலைமைப் பண்புமிக்க எழிலன் அவர்கள் உகந்தவராகத் தெரிய, 2024 நடப்புத் தேர்தலுக்காகவும், இரு தரப்பினராலும் தம் அணியில் இடம் பெற வேண்டப்பட்டவரானார். அந்த அளவுக்கு, காய்தல் உவத்தலின்றி கொந்தளிப்புகளின்றி விளம்பரத்தன்மைக்காய் மெனக்கெடாமல், எடுத்துக் கொண்ட வேலையின்பால்மட்டுமே கவனம் செலுத்தக் கூடியவர். மக்களின்பால் அரவணைப்பும் அக்கறையும் போற்றக் கூடியவர்.

2009 பேரவை விழா முதற்கொண்டே பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்து வரும் எழிலன் அவர்கள், அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக, பெருந்தலைவராக, தேர்தல் அலுவலராக என பல பொறுப்புகளில் பணியாற்றியதோடு, 2019, 2020 ஆம் ஆண்டுக்கான பேரவை விழாக்களை ஒருங்கிணைத்தவர். கோவிட் பெருந்தொற்று காரணம் அவ்விழாக்கள் இணையத்தினூடாக இடம் பெற்றன என்பது நாம் அறிந்ததே.

பேரவையின் நடப்புக் காலத்தின் அவசியத் தேவையாக இருப்பது எல்லாச் சங்கங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பும், சகல தரப்புகளுக்கிடையான நல்லுறவுமேயாகும். அத்தகு நல்லுறவினை, கூட்டுறவினை, எழிலன் போன்ற மனக்கொந்தளிப்பும், ஒருபக்கச்சாய்வும் இல்லாமல் செயற்படக் கூடிய அனுபவமிக்க ஒரு தலைவரால் மட்டுமே கட்டியமைக்க முடியும். அவருக்கான தொடர்புவலை என்பது பரந்து பட்டது. அமெரிக்காவின் தொழில்முனைவோர், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்களென அவருக்கான அறிமுகக்களம் என்பது விரிந்திருக்குமொன்று. அப்படியாகப்பட்ட ஒருவரால்தான், பேரவை போன்ற ஒரு நாடளாவிய அமைப்பில் ஒருசீரான போக்கினைக் கட்டமைக்க முடியும்.

மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அட்லாண்டா நகரில் சிறப்பானதொரு விழாவை நடத்தவும், பேரவைக்கான அடுத்த தலைவர்களை உருவாக்கிக் கொள்ளவும் எழிலன் அவர்களது தெரிவு அமெரிக்கத் தமிழர்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஆகவே எதிர்வரும் தேர்தலில், அரவணைப்பும் அனுபவமும் தலைமைப்பண்புகளும் கொண்ட எழிலன் அவர்களைத் துணைத்தலைவராக்க ஓட்டளித்து வெற்றி பெறச் செய்வது நம் கடமையாகும்.

-பழமைபேசி, 05/20/2024.

Scroll to Top