இந்தக் கட்டுரை 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.

வணக்கம்! பாருங்க, ஒரு சில நண்பர்கள் வார இறுதிங்றதால அலைபேசில அழைச்சுப் பேசிட்டு இருந்தாங்க. என்ன பழம, இன்னும் தமிழ்த் திருவிழாவுல இருந்து விடுபடலை போலிருக்குன்னு கேள்வியும் கேட்டாங்க. அவ்வளவு சுலுவுல விடுபடுற மாதிரியாங்க திருவிழா இருந்துச்சு?

பெரியவங்க வாழ்க்கைய நல்லா அனுபவிச்சி, பிற்பாடு இலக்கியங்கள் படைச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, அதனாலதானே சிற்றின்பம், பேரின்பம்ன்னெல்லாம் சொற்களைக் கண்டு, பின் விபரமா படைப்புகளைப் படைச்சிட்டுப் போயிருக்காங்க?! நுகரும் நேரத்துக்கு மட்டுமே இன்பமளிப்பது சிற்றின்பம். நுகர்ந்தபின்னும் நெடுங்காலம், அல்ல, நினைத்து நினைத்து இன்பம் கொள்வதெல்லாம் பேரின்பம். அதுபோல 2009 தமிழ்த் திருவிழான்னு சொன்னா, அது ஒரு பேரின்பம்! அந்தக் கடலில் மூழ்கிப் பயனுறக் காரணமாயிருந்த பச்சைநாயகி நடராசன் அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

எங்க இலக்கியக் குழுத் தலைவர் குழந்தைவேல் இராமசாமி இருக்காரு பாருங்க, மிகவும் நகைச்சுவை கூடிய பண்பாளர். அவரைக் கலாய்க்குறதுல நமக்கொரு பேரின்பம். நல்ல மனிதர்! இலக்கிய வினாடி வினாவுக்கு குழுவை நல்லபடியா வழிநடத்தினாரு. தினமும் பல்வழி அழைப்புகள் என்ன? தனித்த அழைப்புகள் என்ன?? குழுவை நல்லா புடம் போட்டு செயல்படுத்தினாரு.

அப்படிப்பட்டவர்கிட்ட இருந்து ஒரு ரெண்டு நாள் அழைப்பு வரலைன்னாலே எதோ ஒன்னு விடுபட்டுப் போனா மாதிரியா இருக்கு இப்பெல்லாம்! இந்த சூழ்நிலையிலதாங்க நானே அழைச்சு, என்னங்க ஐயா நீங்க ரெண்டு மூனு நாளா….. கேள்வியக் கேட்டுக் கூட முடிக்கலை, மறுபக்கத்துல இருந்து….

”ஆஈன, மழைபொழிய, இல்லம்வீழ,
அகத்தடியாள் மெய்நோவ, அடிமைசாக,
மாஈரம் போகுதென்று விதைகொண்டோட,
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,
சாவோலை கொண்டொருவன் எதிரேசெல்ல,
தள்ளஒண்ணா விருந்துவர, சர்ப்பம் தீண்ட,
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,
குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!”

”அகோ, நிறுத்துங்க, நிறுத்துங்க! என்ன இது? ரெண்டு மூனு நாளா அழைப்பு கிழைப்பு ஒன்னும் காணலையேன்னு கேட்டா, நீங்கபாட்டுக்கு பேசிட்டே இருக்கீங்க?”

“பாருங்க பழம, பாட்டு என்ன சொல்லுதுன்னா, மாடு கன்னுப் போட, மழை பெய்ய, இருந்த வீடு இடிஞ்சு விழ, வீட்டு வேலைக்காரர் சுகமில்லாமப் போக, பண்ணையாள் இறந்து போய்விட, மழை நின்னு நெலத்துல இருக்குற ஈரம் காஞ்சிடுமோங்ற கவலையில இருக்குற கொஞ்ச நஞ்ச நெல்லையும் எடுத்துட்டு வயலுக்குப் போகுற வழியில கடன்காரன் மறிச்சு நிக்க, அதே நேரத்துல இறப்புச் சேதியக் கொண்டுட்டு ஒருத்தர் எதிருல வர, தள்ளாடிட்டு விருந்தாளி வீட்டை நோக்கி வர, வழியில இருந்த பாம்பும் ஒரு போடு போட்டுத் தள்ள, நிலத்துக்கு கந்தாயம் கேட்டு அரசாள் வர, குருக்கள் வந்து தனக்கு தட்சிணை எதும் தர முடியுமான்னு கேட்டாராம்.

அந்த மாதிரி இருக்கு நீங்க கேட்குறது. ஏஞ்சொல்றேன்னா எனக்கு அவ்வளவு வேலைகள் ஒரே நேரத்துல….”

”ஐயா அந்த பாட்டைத் திரும்பி ஒருக்கா சொல்லுங்க, நான் எழுதிக்கிறேன்…”

“இருக்குற வேலைகள்ல இப்ப இது வேறயா? தட்சிணையோட போக மாட்டீங்க போல இருக்கு?”

“இதான வேண்டாமுங்றது?! தட்சிணை கேட்டவனுக்கு கல்கண்டு தின்னா இனிக்கும்ன்னு சொல்வீங்க. அதைக் கேட்டுட்டு சரி கொடுங்க தின்னு பாக்குறேன்னு சொல்றது தப்பா? தப்பா??”

“யெப்பா சரி, நான் அந்த பாட்டையே சொல்லிடுறேன்…..”

இப்படி எதுக்கும் இலக்கியச் சுவையோட நயம்மிக்க பாடல்களையும் துணுக்குகளையும் அள்ளி வீசுவாருங்க தலைவரு. இந்த நேரத்துல எனக்கு அவர் சொன்ன இன்னொரு பாடலும் அரைகுறையா நினைவுக்கு வருதுங்க…

சொல்லாமற் செய்யும் பெரியார் பலா,
சொல்லிச் செய்யும் சிறியர் மா,
சொல்லியும் செய்யாக் கயவர் பாதிரி
…………

ஆமாங்க, பூக்காமலே காய்ப்பது பலா மரம். அதைப் போல சொல்லாமலே உணர்ந்து தன் கடமையைச் செய்பவர்கள் பலா மரம் மாதிரி உத்தமர்களாம். பூத்துக் காய்ப்பது மாமரம். அதைப் போல சொல்லிச் செய்பவர் மத்திமர். பூத்தும் காய்க்காத பாதிரியைப் போல, எடுத்துச் சொல்லியும் உணராதவர்கள் கயவர்கள்… இப்படிப் போகுதுங்க அந்த ஒளவையாரோட பாடல்.

இப்ப எதுக்கு இந்த பாடலைச் சொல்றேன்னு நீங்க கேட்கலாம். விசயம் இருக்குது இராசா, விசயம் இருக்குது! விழாவுல நாலஞ்சி இளவட்டங்கள் எனக்குப் பின்னாடி உட்கார்ந்து இருந்தாங்க. அரங்கத்துல கடைசிப் பகுதியிலதாங்க நமக்கு இருக்கை கிடைச்சது…. அவ்வ்வ்… அதைவிடுங்க அது ஒரு அற்பமான விசயம். பெரிய பற்றியத்தைப் பாக்குலாம் இப்ப.

இந்த இளவட்டங்க அமைதின்னா அமைதி அப்படி ஒரு அமைதி. பெரியவங்க வந்து அவங்களை முன்வரிசைல உட்காரச் சொல்றாங்க, அதுக்கு இவங்க மறுப்புச் சொல்லி அனுப்புறாங்க…. இதுக்கிடையில பேச்சுவாக்குல எதோ அவங்களுக்குள்ளார பேசிகிட்டது காதுல விழுந்தது…. இங்கொக்க மக்கா, உலகத்துல உருப்படியா இருக்குற சில பல தமிழ் இலக்கிய வலைதளங்களை உண்டு பண்ணி, பராமரிக்கிறதே இவங்கதானாமுங்க… தூக்கிவாரிப் போட்டுச்சு….

சப்பையா, அதுவும் ஒத்தைப் பைசா செலவு செய்யாம ஒரு வலைப்பூவை வெச்சிகிட்டு, பழமைபேசின்னு கொட்டை எழுத்துல எழுதிக் கழுத்துல தொங்கவுட்டுட்டு இருக்குற நான் எங்கே? நேரங்காலம், பொருள் செலவழிச்சு செயலாத்துற, ஒன்னுமே தெரியாத புள்ளைப்பூச்சிங்க மாதிரி அமைதியா இருக்குற இவங்க எங்கே? எனக்கு மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சது… இன்னமுந்தான் உறுத்திகிட்டு இருக்கு….

ஆமாங்க, எந்தவிதமான பிரதிபலன், விளம்பரத்தையும் எதிர்பார்க்காம தமிழுக்காக, தமிழர் நலனுக்காக, அந்த பலா மரம் மாதிரி தானே மனமுவந்து காய்க்கிற செளந்தர பாண்டியன், விஜய் மணிவேல், பொற்செழியன், உமேசு ஆகிய இளைஞர்கள்தாங்க அந்த இளவட்டங்கள். அவங்க செய்த, செய்துகிட்டு இருக்குற பணிகள் குறிச்சு பெரியவங்க சொல்லக் கேள்விப்பட்டு வெகு ஆச்சரியத்துல மூழ்கிப் போனேன்.

தமிழ்ச் சங்கப் பேரவைக்கு இந்த மாதிரி இளைஞர்கள் மேலும் மேலும் போயி வலுச் சேர்த்து, பெருமை சேர்க்கணும். அப்படிச் சேர்க்கிற பட்சத்துல, தமிழ்ச் சங்கம் என்பது ஒரு மனமகிழ் மன்றம்ங்ற தவறான புரிதல், தானாவே மரித்துப் போகும்ங்றது சொல்லித் தெரியணுமா என்ன?!

— பழமைபேசி

நன்றி:- https://maniyinpakkam.blogspot.com/2009/07/blog-post_18.html

Scroll to Top