விஜய் மணிவேல் : ஒரு செயல்வீரனின் தன்னார்வப் பயணம்

தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விஜய் மணிவேலுக்கு அறிமுகம் தேவையா? மேடைக்குப் பின்புறம் இருந்து செயலாற்றும் தன்னார்வலர்களைப் பலருக்கும் தெரியாது. மேடையில், ஒலிபெருக்கியில், வெளிச்சத்தில் பேசுபவர்கள்தான் பேரவைக்கு உழைப்பவர்கள் என்ற தோற்றம் உண்டு. தன்னார்வலராகச் செயலாற்றுபவர்களை விட வாட்சாப் குழுமத்தில் குழாயடி சண்டை போடுபவர்கள்தான் பலருக்கும் அறிமுகம் மிக்கவர்களாக மாறி விடுகிறார்கள். ஆனால் விஜய் மணிவேல், ஒரு தன்னார்வலராகப் படிப்படியாகப் பேரவையில் வளர்ந்து, இன்றைக்கு தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது தன்னார்வலப் பயணம் மிகவும் நீண்டது.

திரு.விஜய் மணிவேல் அவர்களை, எனக்கு 2007-2008 காலகட்டங்களில் இருந்து தெரியும். தமிழ்மணம் என்ற இணையத்தளத்தை நான் நிர்வகித்து வந்த காலத்தில் பேரவையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். பேரவையின் இணையதளத்தை அப்பொழுது விஜய் மணிவேல் உருவாக்கி நிர்வகித்து வந்தார். இணையத் தொழில்நுட்பங்களின் ஆரம்பக்காலத்தில் அது ஒரு சவாலான பணி. இன்றைக்குச் சில நிறுவனங்கள் செய்வதை தனி ஒருவராகச் செய்தார். பேரவை விழாவிற்கு இணையம் மூலமாகப் பதிவு செய்தல், நுழைவுக்கட்டணத்தை இணையம் மூலமாகப் பெறுவது போன்றவை இன்றைய தொழில்நுட்பத்தில் சுலபமாகச் செய்யலாம். ஆனால் அன்றைக்கு இருந்த ஆரம்பக்கட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு பல மணி நேரம் செலவிட்டு உருவாக்கியவர் விஜய் மணிவேல். முகநூல் போன்ற இணையத்தளங்கள் இல்லாத ஆரம்பக்காலத்தில் பேரவை நிகழ்ச்சிகளை இணையம் மூலம் பல சிரமங்களுக்கு இடையே நேரலை செய்தார். ஈழப் போராட்ட காலக்கட்டத்தில் பேரவை விழாவை உலகமெங்கும் நேரலை மூலமாகக் கொண்டு சேர்க்க முடிந்தது. இப்படியாக பேரவையின் செயல்பாடுகளை நவீன இணையக்காலத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கு அடித்தளம் இட்டவர் விஜய் மணிவேல். பேரவை தவிர, இணையத்தொழில்நுட்பங்களின் ஆரம்பக்காலத்தில் தமிழ்க் கணினி சார்ந்து செயல்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம் – The International Forum for Information Technology in Tamil – INFITT) அமைப்பிலும் விஜய் மணிவேல் பணியாற்றி இருக்கிறார்.

நலிந்தக் கலைஞர்களை தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குக் கொண்டு வருவதில் அவரது மிசௌரி தமிழ்ச்சங்கம் மூலமாகப் பெருமுயற்சி மேற்கொண்டார். இன்றைக்குப் பெரிய இசையமைப்பாளராக வளர்ந்துள்ள அந்தோணிதாசன் போன்றவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய காலத்திலேயே, அமெரிக்கா கொண்டு வந்து அவர்களது வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படக் காரணமாக இருந்தார் விஜய் மணிவேல். தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஒரு ஆலயம், தமிழ்ப் பள்ளிகள் என அவரின் தன்னார்வப்பணிகள் பேரவைக்கு வெளியேயும் ஏராளமாக உள்ளன.

இன்றைக்கு பேரவை பெரும் அமைப்பாக வளர்ந்து நிற்கிறது. பேரவையை நோக்கிய வெளிச்சம் அதிகரித்துள்ளது. முதல்வர்களும், அமைச்சர்களும் மேடைகளில் தோன்றுகிறார்கள். ஆனால் சில தமிழ்நாட்டுத் தலைவர்களேவும் பேரவையைப் பயங்கரவாத இயக்கம் என்று விமர்சித்த காலகட்டத்தில், அதனை முறியடிக்கப் பல தகவல்களைத் திரட்டி வெளியிட வேண்டி இருந்தது. இதையெல்லாம் எதிர்கொண்டு தொழில்நுட்ப ரீதியில் அதனை வெளியிட்டு பேரவை என்பது தமிழர்களின் கூட்டமைப்பு என்பதை நிருபிப்பதில் விஜய் மணிவேல் முன்னோடியாக இருந்தார்.

இப்படி ஒரு செயல்வீரராக இருந்து, படிப்படியாக வளர்ந்து, துணைத்தலைவராக இருந்து, தற்பொழுது தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இந்த பேரவைத் தேர்தலில் வலம்வரும் அவதூறுகளைப் புறந்தள்ளி, வேட்பாளர்களின் செயல் திறனை சீர்துக்கிப் பார்க்கும் பொழுது, எனக்கு விஜய் மணிவேல் பேரவைத்தலைவர் பதவிக்குப் பொறுத்தமானவராகத் தெரிகிறார்.

என்னைப் போன்று தமிழ் அமைப்புகளில் பணியாற்றும் பல தன்னார்வலர்களை விஜய் மணிவேல் பிரதிபலிக்கிறார். அதனால் அவரை நான் ஆதரிக்கிறேன். நன்றி!!

Truth, Transparency & Trust

அன்புடன்,
சசிகுமார் ரெங்கநாதன்,
பேரவை பேராளர் மற்றும்
நிறுவனர் – நியூசெர்சி தமிழ்ப் பேரவை

Scroll to Top