Vijay Manivel

யாரிந்த விஜய் மணிவேல்?

உண்மை, நேர்மை, வெளிப்படை ஆகியவற்றுக்காய்க் குரல்கொடுப்பவர் எவராயினும் சொல்வீச்சுக்கணைகளுக்கு ஆட்படுவது உலக வழக்கம். அந்த வரிசையில், விஜய் அவர்கள் மீது ஏவப்படும் சொல்வீச்சு, “விஜய் மணிவேல் ஒரு வேலையும் செய்யவில்லை”. போகின்ற போக்கில் மிக எளிதாய்ச் சொல்லிக் கடக்கின்றனர். இதன் அடிப்படை, மூடுமந்திரங்களை அவ்வப்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது தாளாமல் சொல்லப்படுவதும், அறிவுசார் தலைமைப் பணிகளின்(intellectual contribution) அருமை அறிந்திராததும்தான். எடுத்துக்காட்டாக, யுடியூபுகளில் பல மணி நேர நிகழ்ச்சிகளை, நமக்கு நாமே கூட்டங்களை, 25 பேர், 50 பேர் கொண்டு நடத்திக் கொள்வதும், அமைப்பின் விழுமியங்களுக்காய், சமூகத்தின் நலனுக்காய்ப் பின்புலத்தில் நெறிமுறைகளைக் கட்டிக்காப்பதும் அதற்காக மணிக்கணக்கில் உழைப்பதும் ஒன்றாகிவிடுமா?

தேர்தல் வருகின்றது. ”பேரவை அதன் பாதையிலிருந்து பிறழ்ந்து, தனிப்பட்ட நபர்கள் சிலரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது. அதனைத் தடுத்து நிறுத்த உன்னை விட்டால் ஆளேயில்லை”யெனச் சொல்லி, ஒதுங்கி இருந்தவரை வலியச் சென்று வலியுறுத்தி, துணைத்தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட வைத்தனர். அந்த நொடி துவக்கம், அயராது உழைத்து வருபவர்தாம் விஜய் மணிவேல் அவர்கள். எப்படி?

தேர்தல்களத்தில் மில்லியன் டாலர்க் கொடையை முன்வைத்துப் பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், ’அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? தற்போது எங்கு இருக்கின்றது? பொதுக்குழுவின் பார்வைக்கு ஏன் உடனுக்குடனே உட்படுத்தப்படவில்லை? ’ போன்ற வினாக்களுக்கு விடையில்லை. பேரவையின்பாலும் நேர்மையின்பாலும் அக்கறையுள்ள முன்னோடிகளை நாடிச்சென்று, பல மின்னஞ்சல்களைப் போட வைத்து, பெரிய அளவில் இயக்கம் நடத்தி மன்றாடவே, உண்மை நிலவரம் பொதுவெளிக்குக் கிடைக்கப்பெற்றது. இந்த நான்கு மாதகாலமும் எத்தனை மன அழுத்தம், நெருக்கடியைச் சந்தித்து இருக்க வேண்டும் அவர்? இது சமூகத்துக்கான உழைப்பல்லவா?

ஒருவழியாகப் பணம் இந்த அமைப்பில், அதாவது ‘நண்பன் பவுண்டேசன்’ என்கின்ற அமைப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வருகின்றது. அடுத்த கட்டப் போராட்டம். இலாபநோக்கற்ற அமைப்பின் பணத்தை, இப்படியான, சந்தேகத்துக்குரிய அமைப்பிடம் எப்படி முதலீடு செய்யப்போயிற்று? இயக்கம் நடத்த வித்திட்டார் விஜய் மணிவேல். ஒருவழியாகப் பணம் மீண்டும் அமைப்புக்கே வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகு அந்த அமைப்பைச் செயலிழப்புச் செய்து விட்டது அரசாங்கம். இப்போது சொல்லுங்கள். அமைப்பின் பணம் மில்லியன் டாலர்களைக் காப்பதில் பங்காற்றியது உழைப்பா அல்லவா??

செயற்குழுவில் இருந்த முன்னாள் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். முன்னாள் துணைத்தலைவர் அந்த இடத்தில் இருந்து பணியாற்றத் தயாராக இருந்தும், இடம் கொடாமல், மற்றொருவருக்கு, சட்டக்கோப்பு விதிமுறைகளின்படி சர்ச்சைக்குரிய வகையில் நியமனம் அளிக்கவே, எதிர்ப்புத் தெரிவித்தார் விஜய். பிற்பாடு, அது வழக்காக உருவெடுத்து, அமைப்புக்கும், நெறிமுறைகள் காப்பாற்றபட வேண்டுமென்பவர்களுக்குமாக பெரும் பொருட்செலவு. விஜய் மணிவேல் அவர்களின் வழிகாட்டுதல் என்பது அனுபவழி அறிவுசார்ச் சொத்து எனக் கருதக்கூடாதா? பின்பற்றி இருந்தால், அமைப்பில் தேவையில்லாத நேரவிரயம், சிக்கல்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்தானே?

பேரவைவிழா வருகின்றது. குமரன் சில்க்ஸ் உள்ளிட்ட பலரிடம் வணிகக்கொடை பெற வித்திடுகின்றார் விஜய் மணிவேல். சங்கங்களை நாடி, அவர்களையெல்லாம் விழாவுக்கு வர வைக்கின்றார். இணையரங்குகள் நடத்த வழி செய்கின்றார். இதுவெல்லாம் உழைப்பின்கண் வராதா என்ன?

ஒவ்வொரு செயற்குழுக் கூட்டத்திலும், தனிமனிதனாக அல்லது ஓரிருவரின் ஆதரவுடன் மாற்றுக்கருத்துகளைத் துணிவுடன் முன்வைக்கின்றார். எண்ணிப்பாருங்கள். 13 பேர் இருக்கும் ஒரு குழுவில், 10 பேரின் ஒருசார்புத் தன்மைக்கு எதிராக, ஒவ்வொரு கூட்டத்திலும் மாற்றுக்கருத்துகளை முன்வைக்க அவர் எவ்வளவு பொறுமையும் உறுதியும் கடைபிடித்திருக்க வேண்டுமென்பதை! இதுவெல்லாம் சீரிய தலைமைப்பண்பு, உழைப்பு என்பதில் வராதா??

இப்படியாக கடந்த 2 ஆண்டுகளில் அவர் ஆற்றிவரும் தொண்டுகள், சட்டக்கோப்புக்குழுவில் பங்களிப்பு, உறுப்பினர் சேர்க்கைக் குழுவில் பங்களிப்பு, விழாக்குழுக்களில் பங்களிப்புயெனச் சொல்லிக் கொண்டே போகலாம். நிற்க. இந்த 2 ஆண்டுகள் மட்டும்தானா விஜய் மணிவேல்? 20 ஆண்டுகளாக அவர் ஆற்றிய பணிகளைச் சொன்னால், நேரம் போதாது. பேரவைக்கென, டிஜிட்டல் பிளாட்பார்மே இல்லை. ஒரு நயாப்பைசா செலவில்லாமல் கட்டமைத்தவர் விஜய் மணிவேல். பேரவைக்கான இலச்சினை, இன்றளவும் இருப்பதை, வடிவமைத்துச் செயற்படுத்தியவர் விஜய் மணிவேல்.

2007 காலகட்டம். பேரவையே ஒரு பயங்கரவாத அமைப்புத்தான் என்று புறம் பேசப்பட்டது. மக்கள் தயக்கம் காண்பித்தனர். அந்தக் காலகட்டத்தில்தான் பேரவைக்கான அத்தனை தகவற்தொடர்பு முகாந்திரங்களும் கட்டமைக்கப்பட்டன. 20 ஆண்டுகால விழாக்களின் படங்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து, ஸ்கேனரில் வருடி வருடி, ஒவ்வொரு படமும் தரவேற்ற அவ்வளவு நேரம் பிடிக்கும், இரவெல்லாம் கண்விழித்திருந்து, வலையேற்றி, ஆவணப்படுத்தி இருந்தார் விஜய் மணிவேல். அவையெல்லாம் பேரவையின் அறிவுசார் சொத்து. விலைமதிப்பற்றவை. மில்லியன் டாலர்கள் கொடுத்தாலும் கிடைக்காது. இன்று அவை நமக்கு இல்லை. தொலைத்தவர்களுக்குத் தெரியுமா அந்த மனிதனின் அப்பழுக்கற்ற உழைப்பு?

சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன. சொல்வோம்!


-பழமைபேசி,
05/18/2024.

 

Scroll to Top