Uncategorized

Uncategorized

விஜய் மணிவேல் – ஒரு செயல் வீரனின் தன்னார்வப் பயணம்

விஜய் மணிவேல் : ஒரு செயல்வீரனின் தன்னார்வப் பயணம் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விஜய் மணிவேலுக்கு அறிமுகம் தேவையா? மேடைக்குப் பின்புறம் இருந்து செயலாற்றும் தன்னார்வலர்களைப் பலருக்கும் தெரியாது. மேடையில், ஒலிபெருக்கியில், வெளிச்சத்தில் பேசுபவர்கள்தான் பேரவைக்கு உழைப்பவர்கள் என்ற தோற்றம் உண்டு. தன்னார்வலராகச் செயலாற்றுபவர்களை விட வாட்சாப் குழுமத்தில் குழாயடி சண்டை போடுபவர்கள்தான் பலருக்கும் அறிமுகம் மிக்கவர்களாக மாறி விடுகிறார்கள். ஆனால் விஜய் மணிவேல், ஒரு தன்னார்வலராகப் படிப்படியாகப் பேரவையில் வளர்ந்து, இன்றைக்கு தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது தன்னார்வலப் பயணம் மிகவும் நீண்டது. திரு.விஜய் மணிவேல் அவர்களை, எனக்கு 2007-2008 காலகட்டங்களில் இருந்து தெரியும். தமிழ்மணம் என்ற இணையத்தளத்தை நான் நிர்வகித்து வந்த காலத்தில் பேரவையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். பேரவையின் இணையதளத்தை அப்பொழுது விஜய் மணிவேல் உருவாக்கி நிர்வகித்து வந்தார். இணையத் தொழில்நுட்பங்களின் ஆரம்பக்காலத்தில் அது ஒரு சவாலான பணி. இன்றைக்குச் சில நிறுவனங்கள் செய்வதை தனி ஒருவராகச் செய்தார். பேரவை விழாவிற்கு இணையம் மூலமாகப் பதிவு செய்தல், நுழைவுக்கட்டணத்தை இணையம் மூலமாகப் பெறுவது போன்றவை இன்றைய தொழில்நுட்பத்தில் சுலபமாகச் செய்யலாம். ஆனால் அன்றைக்கு இருந்த ஆரம்பக்கட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு பல மணி நேரம் செலவிட்டு உருவாக்கியவர் விஜய் மணிவேல். முகநூல் போன்ற இணையத்தளங்கள் இல்லாத ஆரம்பக்காலத்தில் பேரவை நிகழ்ச்சிகளை இணையம் மூலம் பல சிரமங்களுக்கு இடையே நேரலை செய்தார். ஈழப் போராட்ட காலக்கட்டத்தில் பேரவை விழாவை உலகமெங்கும் நேரலை மூலமாகக் கொண்டு சேர்க்க முடிந்தது. இப்படியாக பேரவையின் செயல்பாடுகளை நவீன இணையக்காலத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கு அடித்தளம் இட்டவர் விஜய் மணிவேல். பேரவை தவிர, இணையத்தொழில்நுட்பங்களின் ஆரம்பக்காலத்தில் தமிழ்க் கணினி சார்ந்து செயல்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம் – The International Forum for Information Technology in Tamil – INFITT) அமைப்பிலும் விஜய் மணிவேல் பணியாற்றி இருக்கிறார். நலிந்தக் கலைஞர்களை தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குக் கொண்டு வருவதில் அவரது மிசௌரி தமிழ்ச்சங்கம் மூலமாகப் பெருமுயற்சி மேற்கொண்டார். இன்றைக்குப் பெரிய இசையமைப்பாளராக வளர்ந்துள்ள அந்தோணிதாசன் போன்றவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய காலத்திலேயே, அமெரிக்கா கொண்டு வந்து அவர்களது வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படக் காரணமாக இருந்தார் விஜய் மணிவேல். தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஒரு ஆலயம், தமிழ்ப் பள்ளிகள் என அவரின் தன்னார்வப்பணிகள் பேரவைக்கு வெளியேயும் ஏராளமாக உள்ளன. இன்றைக்கு பேரவை பெரும் அமைப்பாக வளர்ந்து நிற்கிறது. பேரவையை நோக்கிய வெளிச்சம் அதிகரித்துள்ளது. முதல்வர்களும், அமைச்சர்களும் மேடைகளில் தோன்றுகிறார்கள். ஆனால் சில தமிழ்நாட்டுத் தலைவர்களேவும் பேரவையைப் பயங்கரவாத இயக்கம் என்று விமர்சித்த காலகட்டத்தில், அதனை முறியடிக்கப் பல தகவல்களைத் திரட்டி வெளியிட வேண்டி இருந்தது. இதையெல்லாம் எதிர்கொண்டு தொழில்நுட்ப ரீதியில் அதனை வெளியிட்டு பேரவை என்பது தமிழர்களின் கூட்டமைப்பு என்பதை நிருபிப்பதில் விஜய் மணிவேல் முன்னோடியாக இருந்தார். இப்படி ஒரு செயல்வீரராக இருந்து, படிப்படியாக வளர்ந்து, துணைத்தலைவராக இருந்து, தற்பொழுது தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இந்த பேரவைத் தேர்தலில் வலம்வரும் அவதூறுகளைப் புறந்தள்ளி, வேட்பாளர்களின் செயல் திறனை சீர்துக்கிப் பார்க்கும் பொழுது, எனக்கு விஜய் மணிவேல் பேரவைத்தலைவர் பதவிக்குப் பொறுத்தமானவராகத் தெரிகிறார். என்னைப் போன்று தமிழ் அமைப்புகளில் பணியாற்றும் பல தன்னார்வலர்களை விஜய் மணிவேல் பிரதிபலிக்கிறார். அதனால் அவரை நான் ஆதரிக்கிறேன். நன்றி!! Truth, Transparency & Trust அன்புடன்,சசிகுமார் ரெங்கநாதன்,பேரவை பேராளர் மற்றும்நிறுவனர் – நியூசெர்சி தமிழ்ப் பேரவை

Uncategorized

தலைமைத்துவம்

தலைமைத்துவம் You make friends by lying and enemies by telling the truth. Tweet இது விரைவான உலகம். உடனுக்குடனே பொருளை விற்கணும்; அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரணும். பொருளியல் சார்ந்த வணிக உலகில், அப்போதைக்கப்போது எது தேவையோ அதைச் சொல்லிக் கடந்து போய்க் கொண்டே இருப்பர். புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் சோசியல் அமைப்புகளில் அது சரிவராது. சக மனிதனின்பால் அக்கறையும் அன்பும் காண்பிக்க வேண்டும். சில நேரங்களில் கசப்பே ஆயினும் உள்ளதை உள்ளபடி சொல்லித்தான் தீர வேண்டும். இனிப்பு முலாம் பூசப்பட்ட பேச்சுகள் தற்சமயத்துக்கு நன்றாக இருந்தாலும், அடுத்த தருணத்தில் அது ஏமாற்றத்தையே கொடுக்கும். உண்மையாக இருந்து விட்டால், அப்போது ‘அன்பாப்புலர்’ என்பதாக இருக்க நேரிட்டாலும், தொலைதூரப் பார்வையில் தலைநிமிர்ந்து நடக்கலாம் நெல்லிக்காய் போல! அப்போது கசப்பாக இருந்தாலும் பிற்பாடு இனிக்க வல்லது! சக தமிழர்கள், அமைப்புக்காய் உழைத்த முன்னோடிகள், அவமானத்துக்கு ஆட்பட நேரிடும் போது, துணிச்சலுடன் அறச்சீற்றம் கொள்கின்றார். 2012. பொறுப்பினைத் துச்சமெனத் துறந்து பீடுநடை போடுகின்றார். அது அவரது மாண்பினைக் காண்பிக்கின்றது. 2014 பேரவை விழா. அவராக முன்வந்து வியப்பளிக்கும் வகையில் ஒரு வேலையைச் செய்கின்றார். விழாவுக்கு மக்கள் வருகின்றனர். Truth, Transparency & Trust. மக்களே, விழாவுக்கு வந்தோருள் கிட்டத்தட்ட எல்லாரும் எனச் சொல்லக் கூடிய வகையில், அந்த நினைவுச்சின்னத்தின் முன் படம் எடுத்து, சோசியல் மீடியா எங்கும் அந்த நினைவுக்காட்சிதான். பிற்பாடு, பேரவை அதற்கான செலவு தொகையை அவருக்குக் கொடுக்கின்றது. அந்தத் தொகையைத் திரும்பவும் பேரவைக்கே கொடையாகக் கொடுத்து விடுகின்றார். தொகை சிறியதாய்த் தோன்றலாம் சிலருக்கு, ஆனால் அந்த மனம்? மக்கள் தொண்டன் விஜய் மணிவேல் தலைமை ஏற்போம், அணி வகுப்போம், ஆதரவளிப்போம்!! -பழமைபேசி. 05/22/2024.

Ezhilan Ramarajan
Uncategorized

தலைமைப்பண்பு மிக்க எழிலன்

தலைமைப்பண்பு மிக்க எழிலன்! எழிலன் அவர்கள், எழும்பூர் டான்பாஸ்கோ முன்னாள் மாணவர், கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை, டெக்ஸாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். எழிலன் அவர்கள் தனித்துவமான தலைமைப் பண்புகளைக் கொண்டவர். எடுத்துக்காட்டாக, அவரது பேரவை அனுபவத்தையே கூட எடுத்துக் கொள்ளலாம். 2009 அட்லாண்டா பேரவை விழா துவக்கம் தொடர்ந்து பேரவையோடு பயணித்து வருபவர். கடந்த முறை தேர்தலின் போது சகல தரப்பினராலும் விரும்பப்பட்டு, துணைப்பொருளாளராக ஒருதரப்பினரால் முன்மொழியப்பட, மறுதரப்பினரால் வழிமொழியப்பட, போட்டியின்றிச் செயற்குழுவுக்குத் தெரிவானார். கடந்தமுறை ஒரே அணியில் தலைவர், துணைத்தலைவருக்குப் போட்டியிட்டவர்கள்தாம் இம்முறை தனித்தனி அணிகளில் தலைவர் போட்டிக்குப் போட்டியிடுகின்றனர். இருவருக்குமே தலைமைப் பண்புமிக்க எழிலன் அவர்கள் உகந்தவராகத் தெரிய, 2024 நடப்புத் தேர்தலுக்காகவும், இரு தரப்பினராலும் தம் அணியில் இடம் பெற வேண்டப்பட்டவரானார். அந்த அளவுக்கு, காய்தல் உவத்தலின்றி கொந்தளிப்புகளின்றி விளம்பரத்தன்மைக்காய் மெனக்கெடாமல், எடுத்துக் கொண்ட வேலையின்பால்மட்டுமே கவனம் செலுத்தக் கூடியவர். மக்களின்பால் அரவணைப்பும் அக்கறையும் போற்றக் கூடியவர். 2009 பேரவை விழா முதற்கொண்டே பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்து வரும் எழிலன் அவர்கள், அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக, பெருந்தலைவராக, தேர்தல் அலுவலராக என பல பொறுப்புகளில் பணியாற்றியதோடு, 2019, 2020 ஆம் ஆண்டுக்கான பேரவை விழாக்களை ஒருங்கிணைத்தவர். கோவிட் பெருந்தொற்று காரணம் அவ்விழாக்கள் இணையத்தினூடாக இடம் பெற்றன என்பது நாம் அறிந்ததே. பேரவையின் நடப்புக் காலத்தின் அவசியத் தேவையாக இருப்பது எல்லாச் சங்கங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பும், சகல தரப்புகளுக்கிடையான நல்லுறவுமேயாகும். அத்தகு நல்லுறவினை, கூட்டுறவினை, எழிலன் போன்ற மனக்கொந்தளிப்பும், ஒருபக்கச்சாய்வும் இல்லாமல் செயற்படக் கூடிய அனுபவமிக்க ஒரு தலைவரால் மட்டுமே கட்டியமைக்க முடியும். அவருக்கான தொடர்புவலை என்பது பரந்து பட்டது. அமெரிக்காவின் தொழில்முனைவோர், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்களென அவருக்கான அறிமுகக்களம் என்பது விரிந்திருக்குமொன்று. அப்படியாகப்பட்ட ஒருவரால்தான், பேரவை போன்ற ஒரு நாடளாவிய அமைப்பில் ஒருசீரான போக்கினைக் கட்டமைக்க முடியும். மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அட்லாண்டா நகரில் சிறப்பானதொரு விழாவை நடத்தவும், பேரவைக்கான அடுத்த தலைவர்களை உருவாக்கிக் கொள்ளவும் எழிலன் அவர்களது தெரிவு அமெரிக்கத் தமிழர்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஆகவே எதிர்வரும் தேர்தலில், அரவணைப்பும் அனுபவமும் தலைமைப்பண்புகளும் கொண்ட எழிலன் அவர்களைத் துணைத்தலைவராக்க ஓட்டளித்து வெற்றி பெறச் செய்வது நம் கடமையாகும். -பழமைபேசி, 05/20/2024.

Vijay Manivel
Uncategorized

யாரிந்த விஜய் மணிவேல்?

யாரிந்த விஜய் மணிவேல்? உண்மை, நேர்மை, வெளிப்படை ஆகியவற்றுக்காய்க் குரல்கொடுப்பவர் எவராயினும் சொல்வீச்சுக்கணைகளுக்கு ஆட்படுவது உலக வழக்கம். அந்த வரிசையில், விஜய் அவர்கள் மீது ஏவப்படும் சொல்வீச்சு, “விஜய் மணிவேல் ஒரு வேலையும் செய்யவில்லை”. போகின்ற போக்கில் மிக எளிதாய்ச் சொல்லிக் கடக்கின்றனர். இதன் அடிப்படை, மூடுமந்திரங்களை அவ்வப்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவது தாளாமல் சொல்லப்படுவதும், அறிவுசார் தலைமைப் பணிகளின்(intellectual contribution) அருமை அறிந்திராததும்தான். எடுத்துக்காட்டாக, யுடியூபுகளில் பல மணி நேர நிகழ்ச்சிகளை, நமக்கு நாமே கூட்டங்களை, 25 பேர், 50 பேர் கொண்டு நடத்திக் கொள்வதும், அமைப்பின் விழுமியங்களுக்காய், சமூகத்தின் நலனுக்காய்ப் பின்புலத்தில் நெறிமுறைகளைக் கட்டிக்காப்பதும் அதற்காக மணிக்கணக்கில் உழைப்பதும் ஒன்றாகிவிடுமா? தேர்தல் வருகின்றது. ”பேரவை அதன் பாதையிலிருந்து பிறழ்ந்து, தனிப்பட்ட நபர்கள் சிலரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது. அதனைத் தடுத்து நிறுத்த உன்னை விட்டால் ஆளேயில்லை”யெனச் சொல்லி, ஒதுங்கி இருந்தவரை வலியச் சென்று வலியுறுத்தி, துணைத்தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட வைத்தனர். அந்த நொடி துவக்கம், அயராது உழைத்து வருபவர்தாம் விஜய் மணிவேல் அவர்கள். எப்படி? தேர்தல்களத்தில் மில்லியன் டாலர்க் கொடையை முன்வைத்துப் பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், ’அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? தற்போது எங்கு இருக்கின்றது? பொதுக்குழுவின் பார்வைக்கு ஏன் உடனுக்குடனே உட்படுத்தப்படவில்லை? ’ போன்ற வினாக்களுக்கு விடையில்லை. பேரவையின்பாலும் நேர்மையின்பாலும் அக்கறையுள்ள முன்னோடிகளை நாடிச்சென்று, பல மின்னஞ்சல்களைப் போட வைத்து, பெரிய அளவில் இயக்கம் நடத்தி மன்றாடவே, உண்மை நிலவரம் பொதுவெளிக்குக் கிடைக்கப்பெற்றது. இந்த நான்கு மாதகாலமும் எத்தனை மன அழுத்தம், நெருக்கடியைச் சந்தித்து இருக்க வேண்டும் அவர்? இது சமூகத்துக்கான உழைப்பல்லவா? ஒருவழியாகப் பணம் இந்த அமைப்பில், அதாவது ‘நண்பன் பவுண்டேசன்’ என்கின்ற அமைப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வருகின்றது. அடுத்த கட்டப் போராட்டம். இலாபநோக்கற்ற அமைப்பின் பணத்தை, இப்படியான, சந்தேகத்துக்குரிய அமைப்பிடம் எப்படி முதலீடு செய்யப்போயிற்று? இயக்கம் நடத்த வித்திட்டார் விஜய் மணிவேல். ஒருவழியாகப் பணம் மீண்டும் அமைப்புக்கே வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகு அந்த அமைப்பைச் செயலிழப்புச் செய்து விட்டது அரசாங்கம். இப்போது சொல்லுங்கள். அமைப்பின் பணம் மில்லியன் டாலர்களைக் காப்பதில் பங்காற்றியது உழைப்பா அல்லவா?? செயற்குழுவில் இருந்த முன்னாள் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். முன்னாள் துணைத்தலைவர் அந்த இடத்தில் இருந்து பணியாற்றத் தயாராக இருந்தும், இடம் கொடாமல், மற்றொருவருக்கு, சட்டக்கோப்பு விதிமுறைகளின்படி சர்ச்சைக்குரிய வகையில் நியமனம் அளிக்கவே, எதிர்ப்புத் தெரிவித்தார் விஜய். பிற்பாடு, அது வழக்காக உருவெடுத்து, அமைப்புக்கும், நெறிமுறைகள் காப்பாற்றபட வேண்டுமென்பவர்களுக்குமாக பெரும் பொருட்செலவு. விஜய் மணிவேல் அவர்களின் வழிகாட்டுதல் என்பது அனுபவழி அறிவுசார்ச் சொத்து எனக் கருதக்கூடாதா? பின்பற்றி இருந்தால், அமைப்பில் தேவையில்லாத நேரவிரயம், சிக்கல்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்தானே? பேரவைவிழா வருகின்றது. குமரன் சில்க்ஸ் உள்ளிட்ட பலரிடம் வணிகக்கொடை பெற வித்திடுகின்றார் விஜய் மணிவேல். சங்கங்களை நாடி, அவர்களையெல்லாம் விழாவுக்கு வர வைக்கின்றார். இணையரங்குகள் நடத்த வழி செய்கின்றார். இதுவெல்லாம் உழைப்பின்கண் வராதா என்ன? ஒவ்வொரு செயற்குழுக் கூட்டத்திலும், தனிமனிதனாக அல்லது ஓரிருவரின் ஆதரவுடன் மாற்றுக்கருத்துகளைத் துணிவுடன் முன்வைக்கின்றார். எண்ணிப்பாருங்கள். 13 பேர் இருக்கும் ஒரு குழுவில், 10 பேரின் ஒருசார்புத் தன்மைக்கு எதிராக, ஒவ்வொரு கூட்டத்திலும் மாற்றுக்கருத்துகளை முன்வைக்க அவர் எவ்வளவு பொறுமையும் உறுதியும் கடைபிடித்திருக்க வேண்டுமென்பதை! இதுவெல்லாம் சீரிய தலைமைப்பண்பு, உழைப்பு என்பதில் வராதா?? இப்படியாக கடந்த 2 ஆண்டுகளில் அவர் ஆற்றிவரும் தொண்டுகள், சட்டக்கோப்புக்குழுவில் பங்களிப்பு, உறுப்பினர் சேர்க்கைக் குழுவில் பங்களிப்பு, விழாக்குழுக்களில் பங்களிப்புயெனச் சொல்லிக் கொண்டே போகலாம். நிற்க. இந்த 2 ஆண்டுகள் மட்டும்தானா விஜய் மணிவேல்? 20 ஆண்டுகளாக அவர் ஆற்றிய பணிகளைச் சொன்னால், நேரம் போதாது. பேரவைக்கென, டிஜிட்டல் பிளாட்பார்மே இல்லை. ஒரு நயாப்பைசா செலவில்லாமல் கட்டமைத்தவர் விஜய் மணிவேல். பேரவைக்கான இலச்சினை, இன்றளவும் இருப்பதை, வடிவமைத்துச் செயற்படுத்தியவர் விஜய் மணிவேல். 2007 காலகட்டம். பேரவையே ஒரு பயங்கரவாத அமைப்புத்தான் என்று புறம் பேசப்பட்டது. மக்கள் தயக்கம் காண்பித்தனர். அந்தக் காலகட்டத்தில்தான் பேரவைக்கான அத்தனை தகவற்தொடர்பு முகாந்திரங்களும் கட்டமைக்கப்பட்டன. 20 ஆண்டுகால விழாக்களின் படங்களைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து, ஸ்கேனரில் வருடி வருடி, ஒவ்வொரு படமும் தரவேற்ற அவ்வளவு நேரம் பிடிக்கும், இரவெல்லாம் கண்விழித்திருந்து, வலையேற்றி, ஆவணப்படுத்தி இருந்தார் விஜய் மணிவேல். அவையெல்லாம் பேரவையின் அறிவுசார் சொத்து. விலைமதிப்பற்றவை. மில்லியன் டாலர்கள் கொடுத்தாலும் கிடைக்காது. இன்று அவை நமக்கு இல்லை. தொலைத்தவர்களுக்குத் தெரியுமா அந்த மனிதனின் அப்பழுக்கற்ற உழைப்பு? சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன. சொல்வோம்! -பழமைபேசி,05/18/2024.  

Uncategorized

தமிழ்த் தொண்டன் விஜய் மணிவேல்

இந்தக் கட்டுரை 2010 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. செறிவெனப்படுவது கூறியது மறாஅமை; பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்!! இவ்வண்ணமே, பண்புக்கும் அன்புக்கும் செறிவுக்கும் பொலிவூட்டி, அமெரிக்கத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பிறர் அறியா வண்ணம் தன் கடமை அறிந்து பெருந்தொண்டாற்றி வரும் இளைஞர்தான், செயல்வீரர் விஜய் மணிவேல் அவர்கள். எத்தகைய விளம்பரத்திற்கும் ஆசைப்படாதவர்; தெளிந்த சிந்தனைக்கு உரியவர்; உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் தொடர்ந்து தன்னாலான தொண்டினைச் செய்து வருபவர்! மேலும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இணைய தளத்தைக் கட்டமைத்துப் பராமரித்து வருபவருங்கூட!! அடுத்த மாதம் நிகழவிருக்கும் தமிழ் விழாப் பணிகளில் மூழ்கியிருந்த அவர், நமது வேண்டுகோளுக்கு இணங்க நேரம் ஒதுக்கி, நமது கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வணக்கம் விஜய். நீங்கள் எத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறீர்கள்? வணக்கம் பழமைபேசி. நான் இங்கு வந்து பத்து ஆண்டுகளாகிறது. காலம் கழிந்ததே தெரியவில்லை. பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உங்களை கடந்த ஓர் ஆண்டாக, அருகில் இருந்து அவதானித்து வருகிறேன். தமிழர்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற நாட்டம் எப்படி வந்தது?? தாயகத்தில் இருக்கும் போதே தமிழுணர்வு கொண்டவராகவும் முனைப்பாகவும் இருந்தீர்களா?? உண்மையில் சொல்லப் போனால், ஊரில் இருந்தவரைக்கும் எனக்கு எந்த உணர்வும் இருந்ததில்லை. என்னை ஒத்த வயதுள்ள இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு, பொழுதைக் கழிப்பதுதான் நான் செய்யும் வேலையாக இருந்தது. இங்கு வந்த பிறகுதான், சிறிது சிறிதாக என்னுள் தாயகத்தின் மீதும், தமிழர்களின்பாலும், தமிழ் மொழியின்பாலும் ஒரு பற்றுதல் ஏற்பட்டது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் மதுரையைச் சார்ந்தவனாக இருந்தாலும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நான்கு அல்லது ஐந்து முறைதான் சென்றிருக்கிறேன்; நான் இங்கே வந்த பிறகு சென்று வந்தையும் சேர்த்து! ஊரில் இருக்கும் வரைக்கும் அதன் அருமை, பெருமையை உணரமுடியவில்லை. ஆனால், இங்கே வந்தபிறகு கோவிலின் பெருமைகளை உணர்ந்து அடிக்கடி செல்ல வேண்டும் என்கிற ஆவல் மேலிடுகிறது. அதேபோல்தான், தாய்மொழியின் மீதான பற்றுதலும் மேலோங்கிய வண்ணம் இருக்கிறேன். நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உணர்வு கொண்டவராக இருந்தாலும், எதோ ஒரு உந்துசக்தி இருந்திருக்கும். குறிப்பாக, தமிழ்ச் சங்கங்கள் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறதைக் காண முடிகிறது. அப்பணிகளுக்குள் எப்படிக் காலடி எடுத்து வைத்தீர்கள்? இந்த இடத்தில் மிசெளரியில் இருக்கும் கெழுதகை நண்பர் பொற்செழியன் அவர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.அவரோடு இருந்த, முனைவர் திரு. ஆறுமுகம் மற்றும் திரு. வாசு அவர்களும் இதற்குக் காரணமாக இருந்தார்கள். பொற்செழியன் அவர்களோடு இணைந்த காலத்தில், மிசெளரி தமிழ்ச் சங்கத்திற்கு இணையதளம் மற்றும் இதர கட்டமைப்பு வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. அதன்பொருட்டு, அவருடன் இணைந்து மேற்கொண்ட பணிகளே முதற்படி. எப்படி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கான பணிகளுக்குள் நுழைந்தீர்கள்? நான் மிசெளரி தமிழ்ச் சங்கத்திற்கு செய்யும் பங்களிப்பைக் கேள்வியுற்ற அன்றைய பேரவைத் தலைவர் தில்லை குமரன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவே, இரவி சுந்தரம் அவர்களுடன் என்னை இணைத்துக் கொண்டேன். இரவி சுந்தரம் அவர்கள், பேரவையின் இணையதளம் மற்றும் தகவல்க் கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தார். அவரோடு சேர்ந்து நானும் செய்ய வேண்டிய பணிகளைப் பங்கிட்டுக் கொண்டேன். ஆனாலும், என் பங்களிப்பானது இன்றைய அளவுக்கு அப்போது இருந்திருக்கவில்லை. அப்படியானால், எப்போது முழுமூச்சாக உழைக்கத் துவங்கினீர்கள்? 2007ஆம் ஆண்டு ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருந்தேன். அவ்விழாவிற்குப் பிறகு முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் தலைவரானார். ஒரு நாள் அவருடன் அளவளாவிக் கொண்டிருக்கையில், எனது மனதிற்பட்டதைக் கூறியதும் அவர் என் மேல் நம்பிக்கை கொண்டவரானார். இது என் வாழ்வில் நடந்த ஒரு பெரிய நிகழ்வு என்றே குறிப்பிட வேண்டும். நல்லதொரு வாய்ப்பினை எனக்களித்தமைக்கு அவருக்கு என்றென்றும் நன்றி உடையவனாகிறேன். மேலும், அன்றிலிருந்து இன்று வரைக்கும் நான் கடந்த வந்த பாதையை எண்ணும் போது, எனக்குப் பெருமையாக இருக்கிறது. பேரவையின் இணைய தளத்தை, பேரவையின் முன்னோடிகளின் உதவியால்தான் வெகுவாக மேன்மைப்படுத்த முடிந்தது. அட்லாண்டாவில் நடந்த தமிழ் விழா குறித்த அனைத்துப் பணிகளையும், தக்க மென்பொருள் கொண்டு தன்னியக்கமாக மாற்றியமை, கட்டமைப்புக்கு வெகுவாக வலு சேர்த்தது. இனி அந்த கட்டமைப்பானது, என்றென்றும் பேரவைக்கு உதவியாக இருக்கும். நண்பர் செளந்திர பாண்டியன் அவர்களது பங்கும் இதில் அளப்பரியது ஆகும். இன்னும் பேரவையின் வலைதளத்தை மேன்மைப்படுத்த வேண்டியது உள்ளது. அதற்காகச் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கிறேன். சென்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டவன் என்கிற முறையில், நீங்கள் கூறியதை எல்லாம் நானே பார்த்து இருக்கிறேன். நீங்கள் வெகுவாகச் செய்த மாற்றங்களுக்கான வரவேற்பு எத்தகையதாக இருந்தது? நல்ல வரவேற்பு இருந்தது. பேரவையின் அத்தனை விபரங்களையும், வெளிப்படையாகப் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எவரும், எப்போது வேண்டுமானாலும் தரவாக்கிக் கொள்ளும் வகையில் அத்தனை விபரங்களும் வழங்கியில் முறையாக்ச் சேமிக்கப்பட்டு உள்ளது. இவையெல்லாம் பேரவையின் கட்டமைப்புக்கு வலுச்சேர்த்தன என்றால் மிகையாகாது. உகந்த நேரத்தில், தக்க ஆலோசனை நல்கி வழிநடத்திய பேரவைத் தலைவர் மற்றும் முன்னோடிகளை நினைவு கொள்வதில் பெருமை அடைகிறேன். நண்பர் என்ற முறையில், உங்கள் வாழ்க்கையைக் குறித்தான கேள்வி. நீங்கள் செய்து வருகிற சமூகப் பணிகள், உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கவில்லையா? அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?? நல்ல கேள்வி. நிச்சய்மாக எனது மனைவியின் ஒத்துழைப்பு இதில் அடங்கி இருக்கிறது. எங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வினால்தான் இது சாத்தியமாகிறது. இப்போதெல்லாம், அன்றாடம் அதிகாலை ஒரு மணி வரைக்கும் விழித்திருந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டாருக்கும் இது தெரிந்தே இருக்கிறது. என்னுடன் இருக்கும் மனைவி, மகள் மட்டுமல்லாது ஊரில் இருக்கும் என் உற்றார் உறவினரும் இதை எண்ணி மகிழ்ந்து, பெருமை கொள்ளவே செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்கா போயும் என் மகன் தமிழுக்குத் தொண்டாற்றுகிறான் என அவர்கள் மற்றவரிடத்தே சொல்லிச் சொல்லிப் பெருமை கொள்வதைக் காண முடிகிறது. விஜய், உங்கள் உழைப்பை எண்ணி நானும் பெருமை கொள்கிறேன். உங்கள் மனைவிக்கும் தமிழின்பால் பற்றுதல் இருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். அது எப்படி?? எனக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பே, தமிழ்ச்சங்கப் பணிகளில் முனைப்பாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்தேன். திருமணம் நடைபெற்ற பின், அமெரிக்கா வந்த என் மனைவி இங்குள்ள தமிழ்ச் சங்கத்தினரோடு நட்புறவோடு பழக ஆரம்பித்துக் கொண்டமையால், இயல்பாகவே அவருக்கும் தமிழின்பால் பற்றுதல் ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளூர்த் தமிழ்ச் சங்க விழாக்கள் என்று சொன்ன மாத்திரத்திலேயே, வீட்டில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். விழாவிற்குச் சென்று நண்பர்களோடு இருந்து பொழுதைக் கழிப்பது, பண்பாடு பேணுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றில் இருக்கும் குதூகலத்தை எண்ணுகையில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகளைக் காண்பதில் என் மனைவிக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான்! உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆண்டிற்கான தமிழ்விழா குறித்த ஏற்பாடுகள், பேரவையின் வளர்ச்சி இது பற்றிக் கூறமுடியுமா?? மிகவும் எழுச்சியாக இருக்கிறது. நிறைய புதுமுகங்களை, இளைஞர்களைக் காண முடிகிறது. அடுத்த தலைமுறையினர் வெகுவாக உள்ளே வர ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ் மொழியின்பால் என்றுமில்லாத பற்றுதல் மேலெழுந்த வண்ணமாக உள்ளனர் என்பது வெள்ளிடைமலை. நாடெங்கும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும், மாணவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. இதையெல்லாம் அவதானிக்கும்போது பேருவகை அடைகிறேன். விஜய், இது ஒரு சிக்கலான கேள்வி. பொதுவாக, ஊதியத்தை எதிர்நோக்கி ஒன்றைச் செய்வார்கள். அல்லது, புகழ், விளம்பரத்திற்க்காக உழைப்பார்கள். உங்களைப் பொறுத்த வரையில் இதில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்கையில், என்றேனும் அயர்ச்சியாக, சலிப்பாக உணர்ந்தது உண்டா?? கிடையவே கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கையில், உற்சாகம், ஊக்கம் என்பது படிப்படியாகக் கூடிக் கொண்டேதான் வருகிறது. முனைப்பின் வீரியம் என்னுள் கிளர்ந்துவிட்டுப் பீறிடுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உள்ளூர்த் தமிழ்ச் சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் என் குழந்தைகள். குழந்தைகளுக்காக உழைப்பதை எந்த ஒரு தமிழனும் அயர்ச்சியாக நினைப்பதில்லை. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? பேரவையானது தமிழுக்கும், தமிழருக்குமான ஒரு கட்டமைப்பு. அதைப் போற்றுவது நம் கடமை. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து, எந்த ஒரு தயக்கமும் இன்றி நாட வேண்டும். ’கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!’ என்பதை வலியுறுத்துகிறேன். தமிழ் உறவுகளுக்கான இடம் இது. புலம் பெயர்ந்த மண்ணில், நமது பண்பாடு பேணவும், மொழியை வளர்த்தெடுப்பதிலும் பேரவையின் பங்கு மகத்தானது. விஜய், தங்களுடன் உரையாடியதில் மனநிறைவும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். மிக்க நன்றி! உங்களுக்கு என்னிடத்தில் ஏதேனும் கேட்க வேண்டி இருக்கிறதா?? ஆண்டு முழுமைக்கும் என்னுடன் தொடர்பில் இருந்து கொண்டு உதவி வரும் உங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் முனைப்பாக பல்வேறு பணிகளை எடுத்துச் செய்து வருகிறீர்கள். அவை யாவும் சிறப்புற அமைய என் வாழ்த்துகள்! — பழமைபேசி நன்றி:- https://maniyinpakkam.blogspot.com/2010/06/blog-post_06.html

Uncategorized

சொல்லாமற்செய்யும் பெரியோர் பலர்!

இந்தக் கட்டுரை 2009 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. வணக்கம்! பாருங்க, ஒரு சில நண்பர்கள் வார இறுதிங்றதால அலைபேசில அழைச்சுப் பேசிட்டு இருந்தாங்க. என்ன பழம, இன்னும் தமிழ்த் திருவிழாவுல இருந்து விடுபடலை போலிருக்குன்னு கேள்வியும் கேட்டாங்க. அவ்வளவு சுலுவுல விடுபடுற மாதிரியாங்க திருவிழா இருந்துச்சு? பெரியவங்க வாழ்க்கைய நல்லா அனுபவிச்சி, பிற்பாடு இலக்கியங்கள் படைச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆமாங்க, அதனாலதானே சிற்றின்பம், பேரின்பம்ன்னெல்லாம் சொற்களைக் கண்டு, பின் விபரமா படைப்புகளைப் படைச்சிட்டுப் போயிருக்காங்க?! நுகரும் நேரத்துக்கு மட்டுமே இன்பமளிப்பது சிற்றின்பம். நுகர்ந்தபின்னும் நெடுங்காலம், அல்ல, நினைத்து நினைத்து இன்பம் கொள்வதெல்லாம் பேரின்பம். அதுபோல 2009 தமிழ்த் திருவிழான்னு சொன்னா, அது ஒரு பேரின்பம்! அந்தக் கடலில் மூழ்கிப் பயனுறக் காரணமாயிருந்த பச்சைநாயகி நடராசன் அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். எங்க இலக்கியக் குழுத் தலைவர் குழந்தைவேல் இராமசாமி இருக்காரு பாருங்க, மிகவும் நகைச்சுவை கூடிய பண்பாளர். அவரைக் கலாய்க்குறதுல நமக்கொரு பேரின்பம். நல்ல மனிதர்! இலக்கிய வினாடி வினாவுக்கு குழுவை நல்லபடியா வழிநடத்தினாரு. தினமும் பல்வழி அழைப்புகள் என்ன? தனித்த அழைப்புகள் என்ன?? குழுவை நல்லா புடம் போட்டு செயல்படுத்தினாரு. அப்படிப்பட்டவர்கிட்ட இருந்து ஒரு ரெண்டு நாள் அழைப்பு வரலைன்னாலே எதோ ஒன்னு விடுபட்டுப் போனா மாதிரியா இருக்கு இப்பெல்லாம்! இந்த சூழ்நிலையிலதாங்க நானே அழைச்சு, என்னங்க ஐயா நீங்க ரெண்டு மூனு நாளா….. கேள்வியக் கேட்டுக் கூட முடிக்கலை, மறுபக்கத்துல இருந்து…. ”ஆஈன, மழைபொழிய, இல்லம்வீழ,அகத்தடியாள் மெய்நோவ, அடிமைசாக,மாஈரம் போகுதென்று விதைகொண்டோட,வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,சாவோலை கொண்டொருவன் எதிரேசெல்ல,தள்ளஒண்ணா விருந்துவர, சர்ப்பம் தீண்ட,கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க,குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!” ”அகோ, நிறுத்துங்க, நிறுத்துங்க! என்ன இது? ரெண்டு மூனு நாளா அழைப்பு கிழைப்பு ஒன்னும் காணலையேன்னு கேட்டா, நீங்கபாட்டுக்கு பேசிட்டே இருக்கீங்க?” “பாருங்க பழம, பாட்டு என்ன சொல்லுதுன்னா, மாடு கன்னுப் போட, மழை பெய்ய, இருந்த வீடு இடிஞ்சு விழ, வீட்டு வேலைக்காரர் சுகமில்லாமப் போக, பண்ணையாள் இறந்து போய்விட, மழை நின்னு நெலத்துல இருக்குற ஈரம் காஞ்சிடுமோங்ற கவலையில இருக்குற கொஞ்ச நஞ்ச நெல்லையும் எடுத்துட்டு வயலுக்குப் போகுற வழியில கடன்காரன் மறிச்சு நிக்க, அதே நேரத்துல இறப்புச் சேதியக் கொண்டுட்டு ஒருத்தர் எதிருல வர, தள்ளாடிட்டு விருந்தாளி வீட்டை நோக்கி வர, வழியில இருந்த பாம்பும் ஒரு போடு போட்டுத் தள்ள, நிலத்துக்கு கந்தாயம் கேட்டு அரசாள் வர, குருக்கள் வந்து தனக்கு தட்சிணை எதும் தர முடியுமான்னு கேட்டாராம். அந்த மாதிரி இருக்கு நீங்க கேட்குறது. ஏஞ்சொல்றேன்னா எனக்கு அவ்வளவு வேலைகள் ஒரே நேரத்துல….” ”ஐயா அந்த பாட்டைத் திரும்பி ஒருக்கா சொல்லுங்க, நான் எழுதிக்கிறேன்…” “இருக்குற வேலைகள்ல இப்ப இது வேறயா? தட்சிணையோட போக மாட்டீங்க போல இருக்கு?” “இதான வேண்டாமுங்றது?! தட்சிணை கேட்டவனுக்கு கல்கண்டு தின்னா இனிக்கும்ன்னு சொல்வீங்க. அதைக் கேட்டுட்டு சரி கொடுங்க தின்னு பாக்குறேன்னு சொல்றது தப்பா? தப்பா??” “யெப்பா சரி, நான் அந்த பாட்டையே சொல்லிடுறேன்…..” இப்படி எதுக்கும் இலக்கியச் சுவையோட நயம்மிக்க பாடல்களையும் துணுக்குகளையும் அள்ளி வீசுவாருங்க தலைவரு. இந்த நேரத்துல எனக்கு அவர் சொன்ன இன்னொரு பாடலும் அரைகுறையா நினைவுக்கு வருதுங்க… சொல்லாமற் செய்யும் பெரியார் பலா,சொல்லிச் செய்யும் சிறியர் மா,சொல்லியும் செய்யாக் கயவர் பாதிரி………… ஆமாங்க, பூக்காமலே காய்ப்பது பலா மரம். அதைப் போல சொல்லாமலே உணர்ந்து தன் கடமையைச் செய்பவர்கள் பலா மரம் மாதிரி உத்தமர்களாம். பூத்துக் காய்ப்பது மாமரம். அதைப் போல சொல்லிச் செய்பவர் மத்திமர். பூத்தும் காய்க்காத பாதிரியைப் போல, எடுத்துச் சொல்லியும் உணராதவர்கள் கயவர்கள்… இப்படிப் போகுதுங்க அந்த ஒளவையாரோட பாடல். இப்ப எதுக்கு இந்த பாடலைச் சொல்றேன்னு நீங்க கேட்கலாம். விசயம் இருக்குது இராசா, விசயம் இருக்குது! விழாவுல நாலஞ்சி இளவட்டங்கள் எனக்குப் பின்னாடி உட்கார்ந்து இருந்தாங்க. அரங்கத்துல கடைசிப் பகுதியிலதாங்க நமக்கு இருக்கை கிடைச்சது…. அவ்வ்வ்… அதைவிடுங்க அது ஒரு அற்பமான விசயம். பெரிய பற்றியத்தைப் பாக்குலாம் இப்ப. இந்த இளவட்டங்க அமைதின்னா அமைதி அப்படி ஒரு அமைதி. பெரியவங்க வந்து அவங்களை முன்வரிசைல உட்காரச் சொல்றாங்க, அதுக்கு இவங்க மறுப்புச் சொல்லி அனுப்புறாங்க…. இதுக்கிடையில பேச்சுவாக்குல எதோ அவங்களுக்குள்ளார பேசிகிட்டது காதுல விழுந்தது…. இங்கொக்க மக்கா, உலகத்துல உருப்படியா இருக்குற சில பல தமிழ் இலக்கிய வலைதளங்களை உண்டு பண்ணி, பராமரிக்கிறதே இவங்கதானாமுங்க… தூக்கிவாரிப் போட்டுச்சு…. சப்பையா, அதுவும் ஒத்தைப் பைசா செலவு செய்யாம ஒரு வலைப்பூவை வெச்சிகிட்டு, பழமைபேசின்னு கொட்டை எழுத்துல எழுதிக் கழுத்துல தொங்கவுட்டுட்டு இருக்குற நான் எங்கே? நேரங்காலம், பொருள் செலவழிச்சு செயலாத்துற, ஒன்னுமே தெரியாத புள்ளைப்பூச்சிங்க மாதிரி அமைதியா இருக்குற இவங்க எங்கே? எனக்கு மனசாட்சி உறுத்த ஆரம்பிச்சது… இன்னமுந்தான் உறுத்திகிட்டு இருக்கு…. ஆமாங்க, எந்தவிதமான பிரதிபலன், விளம்பரத்தையும் எதிர்பார்க்காம தமிழுக்காக, தமிழர் நலனுக்காக, அந்த பலா மரம் மாதிரி தானே மனமுவந்து காய்க்கிற செளந்தர பாண்டியன், விஜய் மணிவேல், பொற்செழியன், உமேசு ஆகிய இளைஞர்கள்தாங்க அந்த இளவட்டங்கள். அவங்க செய்த, செய்துகிட்டு இருக்குற பணிகள் குறிச்சு பெரியவங்க சொல்லக் கேள்விப்பட்டு வெகு ஆச்சரியத்துல மூழ்கிப் போனேன். தமிழ்ச் சங்கப் பேரவைக்கு இந்த மாதிரி இளைஞர்கள் மேலும் மேலும் போயி வலுச் சேர்த்து, பெருமை சேர்க்கணும். அப்படிச் சேர்க்கிற பட்சத்துல, தமிழ்ச் சங்கம் என்பது ஒரு மனமகிழ் மன்றம்ங்ற தவறான புரிதல், தானாவே மரித்துப் போகும்ங்றது சொல்லித் தெரியணுமா என்ன?! — பழமைபேசி நன்றி:- https://maniyinpakkam.blogspot.com/2009/07/blog-post_18.html

Scroll to Top